புதுப்படங்கள் ரிலீஸ் ஆகாததால் ஈரோட்டில் தியேட்டர்கள் திறக்கவில்லை- 27-ந் தேதி திரையிட முடிவு

புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் ஈரோட்டில் நேற்று தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. 27-ந் தேதி முதல் திரையிட தியேட்டர் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளனர்.

Update: 2021-08-23 21:33 GMT
ஈரோடு
புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் ஈரோட்டில் நேற்று தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. 27-ந் தேதி முதல் திரையிட தியேட்டர் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளனர்.
தியேட்டர்கள் திறக்கவில்லை
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு நேற்று முதல் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சினிமா தியேட்டர்களில் திரைப்படங்கள் பார்க்க ரசிகர்களை 50 சதவீதம் அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து நிலையான வழிகாட்டுதல்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன.
ஈரோட்டில் நேற்று தியேட்டர்கள் திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று முன்தினமே பல்வேறு தியேட்டர்களிலும் துய்மைப்பணிகள் நடந்தன. இந்த நிலையில் ஈரோட்டில் தியேட்டர்கள் நேற்று திறக்கப்படவில்லை. புதிய படங்கள் எதுவும் வெளியிடப்படாததால் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
27-ந் தேதி
இதுகுறித்து ஈரோடு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்நாதன் கூறும்போது, 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சில புதிய திரைப்படங்கள் வெளிவர இருப்பதாக உள்ளது. எனவே அன்றைய தினம் முதல் ஈரோட்டில் தியேட்டர்கள் இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
தற்போதைய நிலையில் தியேட்டர்கள் திறந்தாலும் பழைய திரைப்படங்களையே ஓட்ட வேண்டும். சமீபத்தில் வெளியான பல திரைப்படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்பட்டு விட்டன. எனவே பழைய திரைப்படங்களை பார்க்க ரசிகர்கள் வருவார்களாக என்பது சந்தேகமாக உள்ள நிலையில், புதிய திரைப்படங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்க தியேட்டர்கள் உரிமையாளர்கள் முடிவு செய்து உள்ளனர். 27-ந் தேதி முழுமையாக தியேட்டர்கள் இயங்க தொடங்கும் என்றாலும், 26-ந் தேதி (வியாழக்கிழமை) திரையரங்குகளை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து நேற்று சினிமா ரசிகர்கள் சிலர் திரையரங்குகளை தேடி வந்தனர். ஆனால் தியேட்டர்கள் திறக்காததால் ஏமாற்றத்துடன் சென்றனர்.

மேலும் செய்திகள்