பாளையங்கால்வாய் பாலம் உடைந்து சேதம்
மேலச்செவலில் பாளையங்கால்வாய் பாலம் உடைந்து சேதம் அடைந்தது.
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம் மேலச்செவல் பேரூராட்சிக்குட்பட்ட தேசமாணிக்கம் கிராமம் மாணிக்கநகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் சுடுகாடு மற்றும் தாமிரபரணி ஆற்றுக்கு செல்வதற்கு பாளையங்கால்வாயின் குறுக்கே கயிறு கட்டி கடந்து வந்தனர். இதனால் இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்வதற்கு பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.
அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு அங்கு பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 2008-ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
இந்நிலையில் பாலம் மெல்ல மெல்ல சிதிலம் அடைந்து நேற்று முன்தினம் திடீரென உடைந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் கால்வாயை கடப்பதற்கு 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இடுகாட்டிற்கு சடலங்களை கொண்டு செல்வதற்கு வேறு பாதை கிடையாது. எனவே உடைந்த பாலத்தை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.