6,500 நகை கடைகளை அடைத்து போராட்டம்
தங்கத்தில் ஹால்மார்க் அடையாள எண் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நகை வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
மதுரை
தங்கத்தில் ஹால்மார்க் அடையாள எண் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நகை வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
லைசென்சு
தங்க நகையில் செய்யப்படும் கலப்படம் மூலம் மக்கள் ஏமாறுவதை தடுக்க மத்திய அரசு தங்க நகைகளில் ஹால்மார்க் கட்டாயம் என்ற சட்டத்தை கொண்டு வந்து உள்ளது. அதன்படி 14, 18, 22 காரட்டுகளில் மட்டுமே தங்க ஆபரணங்களை தயார் செய்ய வேண்டும் என்றும், அந்த நகை எத்தனை காரட் என்ற விவரத்துடன் ஹால்மார்க் முத்திரை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ஹால்மார்க் நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து நகைக்கடைக்காரர்களும் பி.ஐ.எஸ். லைசென்சு கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த லைசென்சு பெற்ற கடைக்காரர்கள் தயாரிக்கும் நகைகளை இணையதளத்தில் பதிவு செய்து, அதனை தங்களது மாவட்டத்தில் உள்ள ஹால்மார்க் முத்திரை மையங்களில் கொண்டு சென்று கொடுக்க வேண்டும். அங்கு அந்த நகையை தரத்திற்கு ஏற்பட்ட காரட் விவரங்களுடன் ஹால்மார்க் முத்திரையிடப்பட்டு மீண்டும் கடைக்காரர்களுக்கு வழங்கப்படும்.
தமிழகத்தில் பல ஆயிரம் கடைகள் இருந்தாலும் வெறும் 8 ஆயிரத்து 375 கடைகள் மட்டுமே பி.ஐ.எஸ். லைசென்சு பெற்று இருக்கிறார்கள். அதிகபட்சமாக கோவையில் 1,136 கடைகள் லைசென்சு பெற்று இருக்கிறார்கள். சென்னையில் 1103 கடைகளும், மதுரையில் 718 கடைகளும், ராமநாதபுரத்தில் 253, விருதுநகரில் 166, சிவகங்கையில் 188 கடைகளும் பி.ஐ.எஸ். லைசென்சு பெற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
அடையாள எண்
இந்தநிலையில் தற்போது புதிய நடைமுறையாக ஹால்மார்க் முத்திரையுடன் ஒவ்வொரு நகைக்கும் ஹால்மார்க் அடையாள எண் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த அடையாள எண் வழங்குவதன் மூலம் எந்த நகைக்கடை மூலம் அந்த நகை யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்ற விவரம் பதிவாகி விடும். நகையை விற்பனை செய்யும் போது அதில் உள்ள ஹால்மார்க் அடையாள எண் மற்றும் அதனை வாங்கியவர்களின் அடையாள அட்டை விவரத்துடன் பில் செய்ய வேண்டும்.
இந்த அடையாள எண் வழங்கும் முறைக்கு நகைக்கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிந்துள்ளனர். மேலும் இந்த எண் வழங்கும் முறையை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் உள்ள நகைகடைக்காரர்கள் நேற்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மதுரை மாநகரில் சுமார் 3,500 கடைகளும், புறநகரில் 3 ஆயிரம் கடைகளும் உள்ளன. அந்த கடைகள் அனைத்தும் 2.30 மணி நேரம் அடைக்கப்பட்டு இருந்தன.