மதுரை
மதுரையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவிலும் அதே வெப்பசலனம் காணப்பட்டது. இதனால் மதுரை மக்கள் மழைக்காக ஏங்கி காத்திருந்தனர். அவ்வப்போது புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்து விவசாயிகளை மகிழ்வித்தது.
இதற்கிடையே, கடந்த 3 தினங்களுக்கு முன்பு மதுரை நகர் பகுதியில் இரவில் பலத்த மழை பெய்தது. இதனை தொடர்ந்து வந்த நாட்களிலும் மழை பெய்வதுபோன்றே வானம் காட்சியளித்தது. ஆனால் மழை பெய்யவில்லை.
இந்தநிலையில், நேற்று மாலை 5 மணியளவில் ஒரு புறம் வெயில் அடிக்க, மறுபுறம் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது ஒரு மணி நேரத்திற்கும்மேல் நீடித்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மாலை நேரம் என்பதால் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றவர்கள், இளைஞர்கள் மழையில் நனைந்தபடி வாகனத்தில் சென்ற காட்சிகளை பார்க்க முடிந்தது.