மதுரை, ஆக.24-
ஊராட்சி பகுதிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி கேட் வால்வுகள் மூலம் பல்வேறு தெருக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கும் ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள் தினமும் அதிகாலை 4 மணிமுதல் இரவு வரை மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் நிரப்பிக் கேட் வால்வுகள் மூலம் பல்வேறு தெருக்களுக்கு முறை வைத்து தண்ணீர் வினியோகித்து வருகிறோம். அதோடு, அந்த பகுதியில் வரி வசூல், குழாய் மராமத்து, தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறோம். தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியை செய்வதுடன், டெங்கு கொசு ஒழிப்பு, மருந்து தெளித்தல், வரி வசூல், ஊராட்சி செயலாளருக்கு உதவியாக அலுவலகப் பணிகளை செய்து வருகிறோம் என்றனர். மேலும் தங்களுக்கு மாதந்தோறும் சரியான தேதியில் சம்பளம் வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.