சாயப்பட்டறையிலிருந்து வரும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசு
சாயப்பட்டறையிலிருந்து வரும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
கரூர்,
சாயப்பட்டறை
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் அளிக்கும் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை அளித்தனர். அதன்படி மண்மங்கலம் தாலுகா, ஆண்டாங்கோவில் கீழ்பாகம் கிராமம், சஞ்சைநகர் ஊர்பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மேற்கண்ட பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். எங்கள் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சாயப்பட்டறை உள்ளது. அந்த சாயப்பட்டறையிலிருந்து வரும் கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே நிலத்தின் அடியில் விட்டுவிடுகிறார்கள். இதனால் எங்கள் பகுதி முழுவதும் நிலத்தடிநீர் மாசுபட்டு உள்ளது.
வயிற்றுப்போக்கு
சாயக்கழிவுநீர் அப்படியே கலர் கூட மாறாமல் எங்களது போரில் கலந்து விட்டது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் இப்பகுதி மக்களுக்கு தோல்வியாதி, வயிற்றுப்போக்கு மற்றும் பல வியாதிகள் வருகின்றன. மேலும் மாசுபட்ட சாயக்கழிவுநீரை குடிப்பதால் குழந்தைகளும், வயதானவர்களும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே தாங்கள் உடனடியாக விசாரணை செய்து இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அவர்கள் சாய நீர் கலந்த தண்ணீர் பாட்டில்களை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
தெருவிளக்கு வசதி
க.பரமத்தி ஒன்றியம் சாலப்பாளையம், ஜெயந்திநகர் ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊரில் 80 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊருக்கு அடிப்படை வசதியான தெருவிளக்கு கிடையாது. குடிநீர் 30 ஆயிரம் லிட்டர் வைக்க உத்தரவிட்டும், குடிநீர்தொட்டி வைக்கவில்லை. எனவே தெருவிளக்கு, குடிநீர், சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்
அரவக்குறிச்சி தாலுகா, வேலம்பாடி ஊராட்சி, மொண்டியுத்தாங்கரை ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊரில் உள்ள நிலத்தடி நீர் மிகுந்த உப்புத்தன்மை காரணமாக எதற்கும் பயன்படுத்த இயலாத சூழலில் நாங்கள் அதனை வேறுவழியின்றி குடித்து வருவதால் ஊர்பொதுமக்களுக்கு வயிற்றுவலி உள்ளிட்ட உடல் உபாதை பிரச்சினைகள் ஏற்படுகிறது.
எனவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.