4 மாதங்களுக்கு பிறகு நெல்லை அறிவியல் மையம் திறப்பு
4 மாதங்களுக்கு பிறகு நெல்லை அறிவியல் மையம் நேற்று திறக்கப்பட்டது.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மே மாதம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இருந்தாலும் தியேட்டர்கள், பூங்காக்களை திறப்பதற்கும், வெளி மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்குவதற்கும் தடை இருந்து வந்தது.
இந்த நிலையில் மேலும் கொரோனா தொற்று குறைந்ததால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தியேட்டர்களை திறப்பதற்கும், கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கும், பூங்காக்களுக்கு செல்வதற்கும் அரசு அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து நேற்று முதல் அனைத்து பூங்காக்களும் திறக்கப்பட்டன. கடற்கரைக்கு மக்கள் சென்று உற்சாகமாக பொழுதை போக்கினார்கள்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தியேட்டர்கள் இயங்கின. வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் இயக்கப்பட்டன.
நெல்லை மாவட்ட அறிவியல் மையம் 4 மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது. அங்கு உற்சாகத்துடன் குவிந்த பார்வையாளர்களை அலுவலர் குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அறிவியல் மையத்தில் பார்வையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவர்கள் பகல் 1 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளமும் திறக்கப்பட்டது. முன்னதாக அந்த நீச்சல்குளத்தை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். மேலும் நெல்லை மாநகர பகுதியில் உள்ள பூங்காக்கள் காலையிலேயே திறக்கப்பட்டன. ஏராளமானோர் பூங்காவிற்கு சென்று நடைபயிற்சி மேற்கொண்டனர். அவர்களும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து நடைபயிற்சியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தியேட்டர்கள் நேற்று முதல் இயங்கின. ஆனால் நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். புதுப்படங்கள் வெளியாகாததாலும், 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாலும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
வருகிற 27-ந் தேதி முதல் தியேட்டர்களை திறக்க முடிவு செய்துள்ளதாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 21 தியேட்டர்களும், மாநகர பகுதியில் 10 தியேட்டர்களும், தென்காசி மாவட்டத்தில் 16 தியேட்டர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 19 தியேட்டர்களும் உள்ளன.
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்து தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து நெல்லையில் இருந்து நேற்று முதல் வெளிமாநிலங்களுக்கு பஸ்கள் இயங்க தொடங்கின. ஏற்கனவே 3 பஸ்கள் நெல்லையில் இருந்தும், சில பஸ்கள் நெல்லை வழியாகவும் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு இயக்கப்பட்டது. ஏற்கனவே ஓசூர் வரை மட்டும் இயக்கப்பட்ட இந்த பஸ்கள் நேற்று முதல் பெங்களூருவுக்கு சென்றன.
நெல்லை, பாபநாசம், திருச்செந்தூரில் இருந்து நேற்று மாலை 3 அரசு விரைவு பஸ்கள் பெங்களூரு புறப்பட்டு சென்றன. இதேபோல் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு 3 விரைவு பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அறிவுறுத்தினர்.