மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பாவூர்சத்திரம்:
பாவூசத்திரம் அருகே குரும்பலாபேரி மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகராஜன். இவருடைய மகன் குளத்தூர் மணி (வயது 31). இவர் அங்குள்ள அரிசி ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவில் பாவூர்சத்திரத்தை அடுத்த ராஜபாண்டி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் குரும்பலாபேரிக்கு சென்று கொண்டிருந்தார். பாவூர்சத்திரம் அருகே வெள்ளகால் விலக்கு அருகில் சென்றபோது, சாலையோர இரும்பு தடுப்பு கம்பியில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த குளத்தூர் மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து சென்று, குளத்தூர்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த குளத்தூர் மணிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் மாரிசெல்வி என்பவருடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.