அறுவை சிகிச்சையின் போது புதுக்கோட்டை பெண் சாவு

குடும்ப கட்டுப்பாடு செய்த புதுக்கோட்டை பெண் மீண்டும் கருத்தரித்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது திடீரென இறந்தார். அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-23 19:30 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
குடும்ப கட்டுப்பாடு
புதுக்கோட்டை அருகே உள்ள கைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வீரன். இவரது மகள் ராணி (வயது 25). இவருக்கும், பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் ராணி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்தநிலையில் திடீரென ராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சேர்த்தனர். அப்போது ராணியை பரிசோதனை செய்ததில் அவர் மீண்டும் கருத்தரித்து உள்ளதாக கூறியுள்ளனர். இதை கேட்டு ராணியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அறுவை சிகிச்சையின் போது சாவு
பின்னர், மீண்டும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக ராணி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று காலை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது திடீரென அவர் இறந்து விட்டதாக தெரிகிறது. மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் இறந்ததாக ராணியின் உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் ராணி இறந்து விட்டார் என கூறி அவரது உடலை வாங்க மறுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
போலீசார் விசாரணை 
இதுகுறித்து ராணியின் உறவினர்கள் டவுன் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் மீண்டும் கருத்தரித்து உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்