மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-08-23 19:06 GMT
அருப்புக்கோட்டை, 
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
கனமழை 
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி அருப்புக்கோட்டையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகல் வேளையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. 
பொதுமக்கள் அவதி 
அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, ஆத்திபட்டி, காந்திநகர், புளியம்பட்டி, ராமசாமிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 
கனமழை காரணமாக மதுரை ரோடு, காந்தி மைதானம், ெரயில்வே பீடர் ரோடு, விருதுநகர் ரோடு உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீரோடு கலந்து சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கனமழை காரணமாக நகர் முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
வத்திராயிருப்பு 
வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், பிளவக்கல் அணை, கிழவன் கோவில், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி ஆகிய பகுதிகளில் நேற்று முன் தினம் பெய்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது.
வத்திராயிருப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்ததால் நீரோடைகளில் நீர் வரத்து வர தொடங்கியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளிலும் நீர்மட்டமும் சற்று உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
ஆலங்குளம் 
ஆலங்குளம், கோபாலபுரம், புளியடிப்பட்டி, ஏ.லட்சுமிபுரம், சுண்டங்குளம், கொங்கன்குளம், கண்மாய் பட்டி வலையபட்டி, மேலாண்மறைநாடு, அப்பயநாயக்கர் பட்டி, ராசாப்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, கீழாண்மறைநாடு, ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. ஆலங்குளம் அருகே உள்ள கோபாலபுரத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். 
தளவாய்புரம் 
தளவாய்புரம், சேத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் சேத்தூர் துணைமின் நிலையத்தில் உள்ள 2 மின்மாற்றிகள் வெடித்தன. இவற்றால் அயன் கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், நக்கனேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை மின்தடைபட்டது. நேற்று காலை முதல் மாலை வரை சேத்தூர் துணை மின் நிலையத்தில் புதிய டிரான்ஸ்பார்ம் பொருத்தும் பணியில் மின்சார வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்