ஒலி, ஒளி அமைப்பாளர் இரும்பு குழாயால் அடித்துக்கொலை

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஒலி, ஒளி அமைப்பாளரை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்த வாலிபர் பரங்கிப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-23 18:54 GMT
ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் மதுரா கொளத்தங்குறிச்சி மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). ஒலி, ஒளி அமைப்பாளர். இவருக்கு ராஜேஷ் என்ற மகனும், ரஞ்சிதா, ரம்யா என்ற 2 மகள்களும் உள்ளனர்.
ராஜேந்திரனுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த அர்ச்சுனன் மகன் ராமகிருஷ்ணன் (33) என்பவருக்கும் இடையே முன்விரோத தகராறு உள்ளது. நேற்று முன்தினம் ராஜேந்திரன் தனது மகள் திருமண நிச்சயதார்த்தம் தொடர்பாக மனைவி வள்ளி, தங்கை ஜோதி மற்றும் குடும்பத்தினருடன் பேசி சிரித்துக்கொண்டிருந்தார்.

இரும்பு குழாயால் தாக்குதல்

இதை கேட்ட ராமகிருஷ்ணன், அவரது அண்ணன் சுந்தர்ராஜன் (38) ஆகிய 2 பேரும், ஏன்? சலசலவென்று பேசி தொல்லை கொடுக்கிறீர்கள் என்று அவர்களை ஆபாசமாக பேசி கட்டை மற்றும் இரும்பு குழாயால் ராஜேந்திரனை சரமாரியாக தாக்கினர்.
இதை தடுத்த, ராஜேந்திரனின் தம்பி சேகர், மகன் ராஜேஷ் ஆகியோரையும் அவா்கள் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சாவு

பின்னர் மேல்சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தார்.
இது பற்றி ராஜேஷ், ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமகிருஷ்ணன், அவரது அண்ணன் சுந்தர்ராஜன் ஆகிய 2 பேரையும் தேடி வந்தனர்.
சரண்
இதற்கிடையில் ராமகிருஷ்ணன், பரங்கிப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் கோர்ட்டு உத்தரவின்பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சுந்தர்ராஜனை போலீசார் கைது செய்தனர்.  ராமகிருஷ்ணன் குவைத் நாட்டில் வேலை செய்து விட்டு, கொரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்