மின்கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
ராஜபாளையத்தில் பெய்த மழையினால் மின்கம்பங்கள் சாய்ந்தன. இந்த கம்பங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் பெய்த மழையினால் மின்கம்பங்கள் சாய்ந்தன. இந்த கம்பங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மின்கம்பங்கள் சாய்ந்தன
ராஜபாளையத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையினால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த மழை நேற்று அதிகாலை 4 மணி வரை பெய்தது.
இந்த மழையினால் ராஜபாளையம் மகப்பேறு மருத்துவமனையில் உள்ள பெரிய மரம் ஒன்று மின் கம்பத்தின் மீது விழுந்தது. மேலும் நகரில் உள்ள 28 மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.
வெள்ளப்பெருக்கு
தெருக்களில் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலை, சங்கரன்கோவில் முக்கிலிருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் காந்தி சிலை ரவுண்டானா, சங்கரன்கோவில் முக்கு, காந்தி கலை மன்றம் போன்ற முக்கியமான சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சங்கரன்கோவில் முக்கிலிருந்து ஐ.என்.டி.யு.சி. நகர் வரை உள்ள சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சாலை எது, ஓடை எது என தெரியாத நிலை ஏற்பட்டது.
அப்போது அந்த சாலையில் பசுமாடு ஒன்று ஓடைக்குள் விழுந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஜெயராம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பசுமாட்டை மீட்டனர். புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணிகளும், சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.