வந்தவாசி அருகே தோட்டா வெடித்து 2 தொழிலாளர்கள் படுகாயம்

தோட்டா வெடித்து 2 தொழிலாளர்கள் படுகாயம்

Update: 2021-08-23 18:12 GMT
வந்தவாசி

வந்தவாசி அருகே உள்ள நாவல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் அய்யர். இவரது நிலத்தை துணையாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சேகர் (வயது 40) என்பவர் 3 வருடங்களாக அனுபவத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

 இந்நிலையில் நாராயணன் அய்யர் நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்தன. இதற்காக அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் குமார் (49) என்பவருக்கு சொந்தமான தோட்டா வெடி வைக்கும் வண்டி கொண்டு வரப்பட்டது. 

கிணறுதோண்டும் பணியில் ஏம்பலம் கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (43) மற்றும் அதே ஊரை சேர்ந்த 4 பேர் ஈடுபட்டனர். அவர்கள் கிணற்றில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது கிணற்றில பாறைகளை தகர்ப்பதற்காக கொண்டு வரபட்ட வண்டியிலிருந்து தோட்டாக்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தொழிலாளர்கள் மண்ணில் தோண்டுவதற்காக கடப்பாரையால் குத்தினர்.

அப்போது திடீரென கிணற்றில் இருந்த தோட்டா பயங்கர சத்தத்துடன் வெடித்து கற்கள் சிதறின. இதில் உள்ளே இருந்த கிருஷ்ணமூர்த்தி கீழே விழுந்ததில் கண்கள், கைகளில் காயங்கள் ஏற்பட்டன.

அவர்களை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் மோகன் என்பவருக்கும் கால், கையில் லேசாக காயம் ஏற்பட்டது. அவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

தகவலறிந்த தெள்ளார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தோட்டா வைத்த குமார் மற்றும் சேகரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 
தலைமறைவாக உள்ள ஏம்பலம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமு மகன் குமார் (வயது 45) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்