24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்படும்
நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
நாகப்பட்டினம்;
நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
கொரோனா தடுப்பூசி
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணிநேர கொரோனா தடுப்பூசி மையத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 3 நபர்கள் கொண்ட குழு சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். மாவட்டத்தில் இதுவரை இருந்த தடுப்பூசி பற்றாக்குறை தீர்ந்து தேவையான அளவு தடுப்பூசி உடனுக்குடன் கிடைக்குமாறு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அடுத்த ஒரு வாரத்துக்கு நாகை மாவட்டத்தில் 6 வட்டாரங்கள், 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகள், 27 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 அரசு மருத்துவ மனைகள் மற்றும் நாகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட உள்ளது
24 மணி நேரமும்
இதில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 மருத்துவமனைகள், 27 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தினந்தோறும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன், அரசு மருத்துவமனை நிலை அலுவலர் உமாமகேஸ்வரன், மருத்துவ அலுவலர் முகமதுஉமர், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.