ரூ.1½ கோடி மோசடி; திண்டிவனம் பெண் கைது
ரூ.1½ கோடி மோசடி செய்த திண்டிவனம் பெண் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் ரோஷணை பேட்டையை சேர்ந்த வேலாயுதம் என்பவர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரில், திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 44), அவரது மனைவி சக்திப்பிரியா (32) ஆகிய இருவரும் திண்டிவனம்- செஞ்சி சாலையில் ஒரு தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.1 கோடியே 60 ஆயிரத்து 400-ஐ பெற்று மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில் சிவக்குமார், சக்திப்பிரியா ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சிவக்குமாரை கடந்த 3-ந் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான சக்திப்பிரியாவை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சக்திப்பிரியா இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையிலான போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று சக்திப்பிரியாவை கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.