புதிய படங்கள் வெளியாகாததால் பூட்டிக்கிடந்த சினிமா தியேட்டர்கள்
அரசு அனுமதியளித்தபோதிலும் புதிய படங்கள் வெளியாகாததால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் பூட்டிக்கிடந்தன.;
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு தளர்வில் ஆகஸ்டு 23-ந் தேதி முதல் 50 சதவீத ரசிகர்களுடன் சினிமா தியேட்டர்களை திறக்க அரசு அனுமதியளித்துள்ளதோடு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையொட்டி கடந்த 4 மாதங்களாக பூட்டிக்கிடந்த சினிமா தியேட்டர்களை திறந்து கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, வளவனூர், கண்டமங்கலம், விக்கிரவாண்டி அனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 15 சினிமா தியேட்டர்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பூட்டிக்கிடந்த சினிமா தியேட்டர்கள்
இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தின் பல இடங்களில் நேற்று சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு அனுமதியளித்துள்ளபோதிலும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாமல் பூட்டிக்கிடந்தன. இதனால் படம் பார்க்க சென்ற ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இதுகுறித்து தியேட்டர் மேலாளர் ஒருவர் கூறுகையில், அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி சினிமா தியேட்டர்களை கிருமி நாசினியால் சுத்தம் செய்துள்ளோம். அதுபோல் 50 சதவீத ரசிகர்கள் அமர்ந்து படம் பார்க்கும் வகையில் இருக்கையையும் தயார்படுத்தியுள்ளோம். ஆனால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாததால் தியேட்டரை திறக்கும்பட்சத்தில் எதிர்பார்த்த வருமானம் வராது, எனவே சினிமா தியேட்டர்களை திறக்கவில்லை. புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்பட்சத்தில் வருகிற 27-ந் தேதி முதல் தியேட்டர்களை திறக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.