தேன் எடுத்தபோது மரத்தில் சிக்கிய கரடி

வால்பாறை தேயிலை தோட்டத்தில் தேன் எடுத்த போது மரத்தில் கரடி ஒன்று சிக்கிக்கொண்டது. மயக்க ஊசி செலுத்தி அந்த கரடியை வனத்துறையினர் மீட்டனர்.

Update: 2021-08-23 17:23 GMT
வால்பாறை,

வால்பாறை தேயிலை தோட்டத்தில்  தேன் எடுத்த போது மரத்தில் கரடி ஒன்று சிக்கிக்கொண்டது. மயக்க ஊசி செலுத்தி அந்த கரடியை வனத்துறையினர் மீட்டனர். 

மரத்தில் கரடி சிக்கியது

கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகத்துக்கு உள்பட்ட வால்பாறை எஸ்டேட் கிழக்குப்பிரிவு 10-ம் நம்பர் தேயிலை தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் பொந்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று அந்த தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. பி்ன்னர் அந்த கரடி, தேனீகள் கட்டியிருந்த தேன்கூட்டை பார்த்ததும் வேகமாக மரத்தில் ஏறி தேனை எடுத்து தின்றது. 

அப்போது கரடியின் கை அந்த மரத்தில் உள்ள பொந்திற்குள் வசமாக சிக்கிக்கொண்டது. அதனால் மரத்தில் இருந்து கீழே இறங்க முயற்சி செய்த போது கரடியால் முடியவில்லை. இதனால் கரடி அந்த மரத்திலேயே இருந்தது. 

தீப்பந்தங்கள் காட்டி

இந்தநிலையி்ல நேற்று காலை தேயிலை பறிக்க தொழிலாளர்கள் சென்றனர். அப்போது ஒரு மரத்தின் கீழ் 2 கரடிகள் சுற்றியவாறு இருந்தது. மேலும் ஒரு கரடி மரத்தின் மீது சிக்கியபடி சத்தம் போட்டுக்கொண்டு இருந்தது.
 இதனை கவனித்த தொழிலாளர்கள் இதுபற்றி வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 அதன்பேரில் வனச்சரகர் ஜெயச்சந்திரன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தில் சிக்கிய கரடியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மரத்தின் கீழே 2 கரடிகள் நின்றால் மரத்தில் சிக்கிய கரடியை மீட்க முடியவில்லை. இதையடுத்து தீப்பந்தங்கள் காட்டி அந்த 2 கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். 

மயக்க ஊசி

மேலும் சம்பவ இடத்துக்கு கால்நடை டாக்டர் சுகுமார் மற்றும், துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு வந்தனனர். இதையடுத்து மரத்தில் சிக்கிய கரடிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. 
ஆனால் அந்த கரடி மயக்கம் அடையவில்லை. இதையடுத்து மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

 அதன்பின்னர் அந்த கரடி மயக்கம் அடைந்ததும், மரத்தை வெட்டிய வனத்துறையினர் பத்திரமாக அந்த கரடியை மீட்டனர். அப்போது அந்த கரடிக்கு படுகாயம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. 
இதைடுத்து அந்த கரடி ஒரு கூண்டுக்கு அடைக்கப்பட்டது.

கரடிக்கு சிகிச்சை

பின்னர் கரடிக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக ரொட்டிக்கடை பகுதியில் உள்ள மனித-விலங்குகள் மோதல் தடுப்பு பிரிவு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் அந்த கரடிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மரத்தில் தேன் எடுத்த போது கரடியின் கையில் சில காயங்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த கரடிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயங்கள் சரியானதும் அந்த கரடி அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என்று தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்