வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Update: 2021-08-23 17:19 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. நிரந்தர தடுப்பூசி மையங்கள், ஆரம்ப, நகர்புற சுகாதார மையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும்படி சுகாதாரத்துறைக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று வேலூர் மாநகராட்சி பகுதியில் 26 முகாம்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. இதுகுறித்து உள்ளாட்சி அமைப்பினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனால் வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 6,972 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசிகள் கையிருப்பு உள்ள வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்