பழங்குடியின மக்களின் வீடுகளுக்கே சென்று அனுபோக சான்று வினியோகம்
கோத்தகிரியில் பழங்குடியின மக்களின் வீடுகளுக்கே சென்று அனுபோக சான்று வினியோகம் செய்யப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட தெங்குமரஹாடா, கள்ளம்பாளையம், அல்லிமாயார் உள்ளிட்ட ஆதிவாசி பழங்குடியின கிராமங்கள் கோத்தகிரியில் இருந்து மிக தொலைவில் அமைந்துள்ளன.
இப்பகுதியை சேர்ந்த 40 பேர் கூட்டுறவு வங்கிகளில் இருந்து விவசாய பயிர்கடன் பெறுவதற்காக, அனுபோகசான்று கோரி கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் கோத்தகிரிக்கு வந்து சான்றிதழ் பெற்று செல்வது சிரமமாக இருப்பதால், அவர்களின் வீடுகளுக்கு சென்று அனுபோக சான்று வழங்க கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன் உத்தரவிட்டார்.
இதையடுத்து வருவாய் ஆய்வாளர் கோபி, கிராம நிர்வாக அலுவலர் கவுதம் ஆகியோர் தெங்குமரஹாடா, கள்ளம் பாளையம், அல்லிமாயார் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அனுபோக சான்று கோரி விண்ணப்பித்திருந்த பழங்குடியின பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று சான்றிதழ்களை வழங்கினர்.