திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 15 சதவீத தியேட்டர்கள் இயங்க தொடங்கின.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 15 சதவீத தியேட்டர்கள் இயங்க தொடங்கின.

Update: 2021-08-23 16:10 GMT
திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 15 சதவீத தியேட்டர்கள் இயங்க தொடங்கின. 
தியேட்டர்கள் இயங்க அனுமதி 
கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகமாக இருந்தது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாடுகளில் ஒன்றாக தியேட்டர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தன. 
இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், தமிழக அரசு சார்பில் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தளர்வின் ஒரு பகுதியாக நேற்று முதல் தியேட்டர்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. 
வெப்ப பரிசோதனை 
50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும். தியேட்டர் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளுடன் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று தியேட்டர்கள் இயங்க தொடங்கின. 
முன்னதாக தியேட்டர்களுக்கு படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. இதுபோல் கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. ஏற்கனவே சமூக இடைவெளியுடன் தயார் செய்யப்பட்ட இருக்கைகளில் பார்வையாளர்கள் அமரவைக்கப்பட்டனர். 
15 சதவீதம் மட்டுமே...
இது குறித்து தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது:- தமிழகத்தில் தியேட்டர்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்ட முதல் நாளான நேற்று 30 சதவீத தியேட்டர்கள் மட்டுமே இயங்கியுள்ளன. பல தியேட்டர்களில் இன்னமும் பராமரிப்பு பணி மற்றும் ஏற்பாடுகள் முழுமையடையாமல் இருக்கிறது. இதனால் தியேட்டர்கள் பல இயங்கவில்லை. 
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 15 சதவீத தியேட்டர்கள் மட்டுமே இயங்கியுள்ளன. வருகிற நாட்களில் தான் புதுப்படங்கள் ரிலீசாக உள்ளன. இதனால் இந்த புதுப்படங்கள் ரிலீசுக்கு பிறகு பல தியேட்டர்கள் திறக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்