மயிலாடும்பாறை அருகே விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை
மயிலாடும்பாறை அருகே உள்ள சிறைப்பாறையில் விளையாட்டு மைதானம் அமைக்கக்கோரி கலெக்டரிடம் மக்கள் மனு கொடுத்தனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் மனு கொடுக்க வந்தனர். கலெக்டர் அலுவலகம் வெளியே காத்திருந்த மக்களை வரிசையில் நிற்க சொல்லி, ஒவ்வொருவரிடமும் கலெக்டர் முரளிதரன் மனுவை வாங்கி விசாரித்தார். அப்போது மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு அவர் உறுதி அளித்தார்.
விளையாட்டு மைதானம்
தேனி அல்லிநகரம் கக்கன்ஜி நகரில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் புரட்சி ரெட் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஆண்டிப்பட்டி தாலுகா மயிலாடும்பாறை அருகே உள்ள சிறப்பாறை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "எங்கள் ஊரில் உள்ள பொது கிணற்றில் குடிநீர் எடுத்து வருகிறோம். கிணறு மாசடைந்துள்ளதால் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்க வேண்டும். எங்கள் கிராமத்தில் அதிக அளவில் இளைஞர்கள் உள்ளனர். எனவே, போட்டிகள் நடத்துவதற்கும், போலீஸ் மற்றும் ராணுவ பணிக்கு செல்வதற்கு பயிற்சி எடுப்பதற்கும் ஊரில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும். அரசு பஸ் போக்குவரத்து வசதி மற்றும் பொது கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்" என்று கூறியிருந்தனர்.