பொன்னேரி அருகே கைவரிசை; ஊராட்சி வார்டு உறுப்பினர் வீட்டில் 20 பவுன் நகைகள் கொள்ளை
பொன்னேரி அருகே ஊராட்சி வார்டு உறுப்பினர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஊராட்சி வார்டு உறுப்பினர்
பொன்னேரி அருகே ஆலாடு ஊராட்சிக்குட்பட்ட ஆத்திரேயமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பூங்கொடி (வயது 35). இவர் ஆலாடு ஊராட்சி வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்று இருந்தார். இந்நிலையில் பூங்கொடியின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் கொடுத்தனர். இதையறிந்த பூங்கொடி வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
20 பவுன் தங்க நகைகள்
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அதே போல் பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தில் வசிப்பவர் டில்லிபாய் (30). இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற நிலையில், பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.