மாமல்லபுரத்தில் இருந்து கோவளம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் தடுப்புச்சுவரை அலங்கரிக்கும் பூச்செடிகள்

சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலை கடற்கரை பகுதிகள், சவுக்கு தோப்புகள், தென்னந்தோப்புகள், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை மையங்கள் மிகுந்த இயற்கை எழில் கொஞ்சும் சாலையாக உள்ளது.

Update: 2021-08-23 07:12 GMT
புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களுக்கு இந்த சாலை வழியாக பயணம் செய்யவே வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர். இந்த சாலையை சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்த தமிழ்நாடு அரசின் சாலை மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாகனங்களில் வேகத்தை கணக்கிடும் நவீன கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த சாலையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பயணிகள் அமருவதற்கு நிழற்குடையுடன் கூடிய பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டன. சாலையில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்லும் போது மின் விளக்கு இல்லாத பகுதிகள் என வலது, இடது புறங்களில் தார் சாலையில் நவீன ரிப்ளக்டர் விளக்குள் பொருத்தப்பட்டன. இதையடுத்து தற்போது இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மாமல்லபுரம் முதல் கோவளம் வரை பூச்செடிகள் அமைக்கும் பணிகளை சாலை மேம்பாட்டு நிறுவனம் தொடங்கி உள்ளது.

தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம், தேவனேரி, பட்டிபுலம், நெம்மேலி, புதுகல்பாக்கம், தெற்குபட்டு, திருவிடந்தை உள்ளிட்ட பகுதிகளில் பூச்செடிகள் வளர்க்கப்பட்டு அவை பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன. தோட்டக்கலை பணியாளர்கள் மூலம் பராமரிக்கப்படும் பூச்செடிகளுக்கு தினமும் டேங்கர் லாரி மூலம் செடிகள் கருகாதாவாறு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அதனை ரசித்து விட்டு செல்கின்றனர்.

மேலும் செய்திகள்