382-வது பிறந்தநாள்; சென்னையின் பெருமைகளை நினைவுகூர்ந்த மக்கள்
சென்னையின் 382-வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள ‘நம்ம சென்னை’ சின்னத்தின் முன்பு இளைஞர்கள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.
வந்தாரை வாழவைக்கும் மாநகர்
தமிழ்நாட்டின் தலைநகர், வந்தாரை வரவேற்று வாழவைக்கும் மாநகர் சென்னைக்கு நேற்று 382-வது பிறந்தநாள் ஆகும். தகவல் தொழில்நுட்ப புரட்சி, விஞ்ஞான வளர்ச்சி போன்ற காரணங்களால் நாட்டிலேயே மிகச் சிறந்த மாநகரம் என்ற இலக்கை நோக்கி சென்னை பயணித்துக்கொண்டிருக்கிறது. மழை-வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் அதிக பாதிப்புகளை சந்தித்தாலும், அதில் இருந்து உடனடியாக மீண்டெழும் தன்மையை சென்னை தன்னகத்தே பெற்றுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பில் இருந்தும் சென்னை மீண்டு வருகிறது.
சமூக வலைதளங்களில்...
வரலாற்று அரிய நிகழ்வுகள், பாரம்பரிய கட்டிடங்கள், புராதன நினைவு சின்னங்கள், அடையாளங்களை உள்ளடக்கிய சென்னையின் பெருமைகளை உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி தொழில், கல்வி, பணி நிமித்தமாக சென்னையில் தங்கி இருக்கும் வெளிமாநில, வெளியூர்வாசிகளும் நேற்று நினைவுகூர்ந்தனர். சென்னை கடந்து வந்த பாதையை முதியோர்கள் அசைபோட்டனர்.‘சென்னைக்கு 382-வது பிறந்தநாள்’ என்பதை சமூக வலைதளங்களில் பலரும் பெருமையாக பகிர்ந்தனர். சென்னையின் அடையாளங்களை பறைசாற்றும் புகைப்படங்களையும், புகழை பிரதிபலிக்கும் திரைப்பட பாடல்களையும் செல்போன் ‘வாட்ஸ்-அப்’ ஸ்டேட்டசாக வைத்தும் மகிழ்ந்தனர்.
‘நம்ம சென்னை’ முன்பு ‘செல்பி’
கொரோனா சூழலால் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டதால், அங்கு அமைந்துள்ள ‘நம்ம சென்னை’ அடையாள ‘செல்பி’ சின்னம் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.சென்னை தினத்தையொட்டி ‘நம்ம சென்னை’ அடையாள சின்னத்தின் முன்பு பலரும் திரண்டு செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஆர்வமிகுதியால் இளைஞர்கள் சிலர் தடைகளை தாண்டிச் சென்று அந்த சின்னத்தின் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்து ஆர்ப்பரித்தனர்.
பிறந்தநாள் பரிசு
பெருநகர மாநகராட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருந்தாலும் சென்னையை மேலும் மெருகூட்டும் வகையில் ‘சிங்கார சென்னை 2.0’ என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் சென்னை தினத்தையொட்டி குடிசைப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாநகராட்சி கட்டிட சுவர்கள், பாலங்கள் போன்ற இடங்களில் சென்னையின் பெருமைகளை பேசும் ஓவியங்கள் வரையும் போட்டிகளும் நடத்தப்பட்டன.
382-வது பிறந்தநாள் காணும் சென்னைக்கு பிறந்தநாள் பரிசாக இந்த மாநகரை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க இனிமேல் கண்ட இடங்களில் குப்பையை கொட்ட மாட்டோம், எச்சில் துப்ப மாட்டோம், சிறுநீர்-மலம் கழிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.