மைசூரு தசரா விழா; ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க 14 யானைகள் தேர்வு
மைசூரு தசரா விழா ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க 14 யானைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.;
மைசூரு:
மைசூரு தசரா விழா
மைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப்புகழ் பெற்ற இந்த மைசூரு தசரா விழா மைசூருவை ஆண்ட பண்டைய மன்னர்கள் காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. மைசூரு தசரா விழா சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மைசூரு தசரா விழாவில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் தனியார் தர்பார் நடத்துவதும், 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க அதை யானைகள் புடைசூழ ஒரு யானை சுமந்து வரும் ஜம்பு சவாரி ஊர்வலமும் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்வுகளாகும்.
அவற்றைக்காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டு மைசூரு தசரா விழா விஜயதசமியையொட்டி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் விஜயதசமியையொட்டி வருகிற அக்டோபர் மாதம் தசரா விழா நடைபெற இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
14 யானைகள் தேர்வு
இந்த நிலையில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக மத்திக்கோடு, தொடஹரவே, ஆனேகோடு, துபாரே ஆகிய 4 யானைகள் முகாம்களில் இருந்து 14 யானைகளை வனத்துறையினர் தேர்வு செய்துள்ளனர். அவைகள் அபிமன்யு, பீமா, கோபி, கோபாலகிருஷ்ணா, லட்சுமணா, விக்ரம், தனஞ்செயா, பிரசாந்த், காவேரி, விஜயா, சைத்ரா, ஹர்ஷா உள்பட 14 யானைகள் ஆகும். குறிப்பாக மத்திக்கோடு யானைகள் முகாமில் இருந்து தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானையும், அதற்கு மாற்றாக பீமா யானையும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த 14 யானைகளுக்கும் வனத்துறை அதிகாரி கரிகாலன் முன்னிலையில், கால்நடை டாக்டர் ரமேஷ் மற்றும் மருத்துவ குழுவினர் உடல் பரிசோதனை செய்தனர். மேலும் அவற்றுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த 14 யானைகளில் 11 ஆண் யானைகள் ஆகும். 3 பெண் யானைகள் ஆகும்.
ஜம்பு சவாரி ஊர்வலம்
இந்த ஆண்டும் ஜம்பு சவாரி ஊர்வலம் அரண்மனை வளாகத்திலேயே நடத்தி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. யானைகளின் உடல் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவற்றை மைசூரு அரண்மனை வளாகத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் அவற்றுக்கு பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரி கரிகாலன் தெரிவித்தார்.