பசனகவுடா பட்டீல் யத்னால் குறித்து பேச விரும்பவில்லை; பசவராஜ் பொம்மை சொல்கிறார்
பா.ஜனதா தலைவர்களுக்கு எதிராக பேசி வரும் பசனகவுடா பட்டீல் யத்னால் குறித்து பேச விரும்பவில்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் ஆதர்சா நகரில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் வீடு உள்ளது. நேற்று காலையில் அவர் தனது வீட்டின் முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. எப்போதும் கட்சிக்கும், கட்சி தலைவர்களுக்கும் எதிராக பேசி வருகிறார். தார்வார் மாவட்டம் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் அவற்றை மீறி வெடிகுண்டு வீசினாலும் நான் ஒரே இடத்தில் மக்களை திரட்டி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவேன் என்று பசனகவுடா பட்டீல் யத்னால் கூறியுள்ளார். அவர் அவ்வாறு கூறியதுபற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. அவரைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை.
பிரதமரை சந்திக்கலாம்
அடுத்த மாதம்(செப்டம்பர்) தார்வார்-உப்பள்ளி இரட்டை மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் நான் எந்த ஒரு கருத்தும் கூற முடியாது. சாதி பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியிடம் புகார் தெரிவிக்க எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருகிறார்கள். பிரதமரை சந்திக்க அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. யார் வேண்டுமானாலும் பிரதமரை சந்திக்கலாம். அவர்கள் தாராளமாக பிரதமரை சந்தித்து புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து தனது வீட்டில் நடந்த ரக்ஷா பந்தன் விழாவில் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். அவருக்கு அவரது சகோதரிகள் ராக்கி கயிறு கட்டினர். குறிப்பாக பிரம்மகுமாரிகள் பலர் இதில் கலந்து கொண்டு பசவராஜ் பொம்மைக்கு ராக்கி கயிறுகள் கட்டி ஆசி வழங்கினர்.