ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே வாரத்தில் ‘மாஸ் கிளீனிங்’ மூலம் 35 டன் குப்பை கழிவுகள் அகற்றம்

ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே வாரத்தில் ‘மாஸ் கிளீனிங்’ மூலம் 35 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன.

Update: 2021-08-22 20:53 GMT
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே வாரத்தில் ‘மாஸ் கிளீனிங்’ மூலம் 35 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன.
‘மாஸ் கிளீனிங்’
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால், 4 மண்டலங்களிலும் கழிவு நீர் ஓடைகளை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி ஆகியவற்றை ஒருங்கிணைந்து மேற்கொள்ள ‘மாஸ் கிளீனிங்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பகுதிகளிலும் 100 தூய்மை பணியாளர்களை கொண்டு மேற்கண்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக 4 மண்டலங்களில் 16 இடங்களில் தூய்மை பணியாளர்கள் மூலம் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த ஒரே வாரத்தில், 35 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள பகுதிகளிலும் சுழற்சி முறையில் இந்த ‘மாஸ் கிளீனிங்’ பணி நடைபெற உள்ளது.
100 பணியாளர்கள்
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் ஒருங்கிணைந்த சிறப்பு துப்புரவு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியானது ‘மாஸ் கிளீனிங்’ மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் சுகாதார ஆய்வாளர், உதவி சுகாதார ஆய்வாளர் தலைமையில் சாக்கடை அடைப்புகளை நீக்குதல், தூர்வாருதல், குப்பைகளை அகற்றுதல், மழை நீர் செல்ல தடையாக உள்ள பகுதிகளை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மரக்கிளைகள், தேவையின்றி வளர்ந்துள்ள புதர்களை அகற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களை கண்டறிந்து வடிகால்களை அமைத்தல், பொதுமக்களுக்கு டெங்கு பரவல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஒரே நேரத்தில் 100 பணியாளர்களை கொண்டு, ஒரே இடத்தில் ‘மாஸ் கிளீனிங்’ செய்வதால் அந்த பகுதியை முழுமையாக சுத்தப்படுத்த முடிகிறது. அதேபோல், சாக்கடை கழிவுகளை அடுத்த நாளே அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்.
35 டன் அகற்றம்
பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இந்த பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 மண்டலங்களில் 16 இடங்களில் ‘மாஸ் கிளீனிங்’ மூலம் 35 டன் குப்பை கழிவுகள், சாக்கடை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. டெங்கு தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இனி வரும் நாட்களில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே ‘மாஸ் கிளீனிங்’ பணிகள் நடக்கும்.
இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் புகாரின் அடிப்படையிலேயே ‘மாஸ் கிளீனிங்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்