தியேட்டர்களில் முழுவீச்சில் சுத்தப்படுத்தும் பணி
119 நாட்கள் கழித்து இன்று திறக்கப்படவுள்ளதால் பெரம்பலூரில் உள்ள தியேட்டர்களில் நேற்று சுத்தப்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்தது.
பெரம்பலூர்:
இன்று திறப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் அரசு அறிவித்த ஊரடங்கு இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைய இருந்த நிலையில், மேலும் சில தளர்வுகளை அறிவித்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்போது நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் இன்று முதல் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத ரசிகர்களுடன் தியேட்டர்களை திறக்கலாம், தியேட்டர் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதை, அதன் உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையையும் அரசு விதித்துள்ளது.
சுத்தப்படுத்தும் பணி
அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்படவுள்ளதால், நேற்று பெரம்பலூரில் உள்ள 4 தியேட்டர்களிலும் சுத்தப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.
அப்போது தியேட்டா்களில் பராமரிப்பு பணிகள் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி என்பதால் இருக்கைகளில் சமூக இடைவெளி விட்டு அமருவதற்காக ஒரு இருக்கை விட்டு, அடுத்த இருக்கையில் அமரக்கூடாது என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
ரசிகர்கள் மகிழ்ச்சி
கொரோனா முதல் அலையின்போது தொடர்ந்து 8 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் திறக்கப்பட்டது. பின்னர் கொரோனா 2-வது அலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டன. தற்போது 119 நாட்கள் கழித்து மீண்டும் இன்று தியேட்டர்கள் திறக்கப்படவுள்ளதால், அதன் உரிமையாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.