வினய்குல்கர்னியை, கட்சியை பலப்படுத்த பயன்படுத்துவோம்; டி.கே.சிவக்குமார் பேட்டி
வினய்குல்கர்னியை கட்சியை பலப்படுத்த பயன்படுத்துவோம் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நிவாரணம் வழங்கினோம்
பிறப்பு-இறப்புக்கு மத்தியில் நாம் என்ன செய்தோம் என்பது முக்கியம். சமூக சேவையாற்றுவது என்பது மிக முக்கியமானது. நாம் சேவையாற்றினால் இந்த சமூகம் நம்மை மதிக்கும். பா.ஜனதாவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி., முஸ்லிம்கள் பஞ்சர் போடுபவர்கள் என்றும், அவர்களின் இதயத்தை கிழித்து பார்த்தால் 2 எழுத்துகள் கூட இருக்காது என்றும் விமர்சனம் செய்தார்.
அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான தொழிலை செய்கிறார்கள். அதில் என்ன தவறு உள்ளது. பஞ்சர் போடாவிட்டால் வாகனம் ஓடுமா?. சாம்ராஜ்நகரில் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் 36 பேர் உயிரிழந்தனர். நாங்கள் அங்கு சென்று இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கினோம்.
வரியை குறைக்கவில்லை
மாநில அரசு எந்த உதவியையும் வழங்கவில்லை. கொரோனாவால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். கொரோனா நெருக்கடி காலத்தில் பொதுமக்களுக்கு அதிகளவில் இடையூறுகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு எந்த உதவியும் செய்யவில்லை. வியாபாரிகளுக்கு வரியை குறைக்கவில்லை. எனக்கு எதிராக பா.ஜனதாவினர் குறை கூறினர். முஸ்லிமக்கள் எனது சகோதரர்கள். வினய்குல்கர்னி சிறையில் இருந்து வந்துள்ளார்.
அவரை நாங்கள் கட்சியை பலப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தி கொள்வோம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அவர் எங்கள் கட்சியின் முன்னணி தலைவர். அவர் மந்திரியாக பணியாற்றியவர். வினய்குல்கர்னி மற்றும் ஜமீர்அகமதுகான் ஆகியோருக்கு ஆதரவாக எங்கள் கட்சி உள்ளது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.