பிரசவ வார்டில் சிகிச்சையில் இருந்த 8 மாத கர்ப்பிணி ‘திடீர்' சாவு

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் சிகிச்சையில் இருந்த 8 மாத கர்ப்பிணி திடீரென்று உயிரிழந்தார்.

Update: 2021-08-22 20:40 GMT
பெரம்பலூர்:

8 மாத கர்ப்பிணி
பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி மேட்டு தெருவை சேர்ந்தவர் அப்பாவு. இவரது மூத்த மகள் ரேவதி (வயது 24). இவருக்கு வீட்டுடன் மாப்பிள்ளையாக இருக்கும் வகையில் அவரது பெற்றோர் வரன் பார்த்தனர். இதைத்தொடர்ந்து ரேவதிக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையம் தாலுகா செல்லம்பட்டுவை சேர்ந்த செல்வத்தின் மகன் குணசேகரனுக்கும்(27) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து வடக்கு மாதவியில் 4 மாதங்கள் ரேவதியுடன் குடும்பம் நடத்திய குணசேகரன், பின்னர் தனது ஊருக்கு சென்று விட்டார். அப்போது ரேவதி 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். தற்போது 8 மாத கர்ப்பிணியான ரேவதிக்கு கை, கால்கள் வீக்கமாக இருந்த காரணத்தினால் கடந்த 16-ந்தேதி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
வாயில் நுரை தள்ளியபடி...
இதனால் மீண்டும் தனது மனைவியை பார்க்க மருத்துவமனைக்கு வந்த குணசேகரன் 2 நாட்கள் மட்டும் இருந்து விட்டு, மீண்டும் தனது ஊருக்கு சென்று விட்டார். மருத்துவமனையில் ரேவதியுடன் அவரது பெற்றோர் மட்டும் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை பிரசவ வார்டிற்கு வெளியே இருந்த அப்பாவு உள்ளே சென்று தனது மகள் ரேவதியை பார்த்தபோது, அவர் திடீரென்று வாயில் நுரை தள்ளி, பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
விசாரணை
மேலும் அவர் இது பற்றி உடனடியாக பணியில் இருந்த செவிலியர்களிடம் கூறினார். இதையடுத்து செவிலியர்கள் ரேவதிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே டாக்டர்கள் வந்து ரேவதியை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது தொடர்பாக அப்பாவு பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கர்ப்பிணி ரேவதிக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால், இந்த வழக்கு தொடர்பாக பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி விசாரணையை தொடங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்