விவசாயி வீட்டில் 9 பவுன் நகை- பணம் திருட்டு
விவசாயி வீட்டில் 9 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
ஜெயங்கொண்டம்:
மகன் வீட்டிற்கு சென்றார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் மேலத்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 74). விவசாயியான இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு கடந்த 19-ந் தேதி சென்றார்.
பின்னர் நேற்று முன்தினம் மதியம் மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டு கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்குள்ள 4 பீரோக்கள், 2 பெட்டிகள் ஆகியவையும் உடைக்கப்பட்டிருந்தன.
திருட்டு
மேலும் அவற்றில் இருந்த 9 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் திருட்டு போயிருந்தது. வீட்டில் ஆள் இல்லாதநேரத்தில் யாரோ மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து மகாலிங்கம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.