மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சைக்கிள் பேரணி
கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சைக்கிள் பேரணியை மேற்கொண்டனர். அதனை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சைக்கிள் பேரணியை மேற்கொண்டனர். அதனை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
சைக்கிள் பேரணி
இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) சார்பில் நேற்று காலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து டெல்லிக்கு சைக்கிள் பேரணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
இந்த சைக்கிள் பேரணியில் 36 வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், உத்தரபிரதேசம் வழியாக டெல்லியை சென்றடைகிறார்கள்.
இந்த பேரணி 2 ஆயிரத்து 850 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சென்று மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2-ந்தேதி டெல்லி ராஜ்கோட்டை அடைகிறது.
அமைச்சர் மனோ தங்கராஜ்
சைக்கிள் பேரணியை நேற்று காலை 8 மணிக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் விஜய் வசந்த் எம்.பி., குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், சென்னை ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படை மண்டல டி.ஐ.ஜி. தினகரன், திருவனந்தபுரம் பள்ளிப்புரம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மண்டல டி.ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் நாயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முக்கடல் சங்கம கடற்கரையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.