பா.ஜ.க. பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது
தம்மம்பட்டியில் ரூ.40 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பா.ஜ.க. பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கார்மேகம் அதிரடியாக உத்தரவிட்டார்.
தம்மம்பட்டி, ஆக.23-
தம்மம்பட்டியில் ரூ.40 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பா.ஜ.க. பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கார்மேகம் அதிரடியாக உத்தரவிட்டார்.
புகையிலை பொருட்கள்
சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் வாகன சோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி தம்மம்பட்டி நடுவீதியை சேர்ந்த, கெங்கவல்லி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. வர்த்தக அணி பொருளாளர் பிரகாஷ் என்பவரை சேலம் மாவட்ட தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
மேலும் அவருக்கு சொந்தமான குடோன்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது உடையார்பாளையம் நாயக்கர் தோட்டத்தில் உள்ள குடோனில் மூட்டை, மூட்டையாக 1,455 கிலோ தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.
குண்டர் சட்டத்தில் கைது
இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரகாசை கைது செய்தனர். பின்னர் அவர் ஜூலை 24-ந் தேதி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே பா.ஜ.க. பிரமுகர் பிரகாசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் மற்றும் தம்மம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் பிரகாசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கார்மேகம் அதிரடியாக உத்தரவிட்டார். இதுகுறித்த நகல் சேலம் சிறையில் உள்ள பிரகாசிடம் போலீசார் வழங்கினர்.