மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பரிதாப சாவு
சுற்றுலா வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம், ஆக.23-
சுற்றுலா வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சுற்றுலா வேன் மோதல்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மண்ணூர் மோட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் நஞ்சப்பன் (வயது 21). அதேபகுதியை சேர்ந்தவர் ராஜி மகன் சிவராமன் (19). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தும்பல் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் மாலை அவர்கள் 2 பேரும் தங்களது ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வழியில் பழைய மாமாஞ்சி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே சுற்றுலா வேன் ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது.
பரிதாப சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட நஞ்சப்பன், சிவராமன் ஆகியோர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது