வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது
ராதாபுரம், பணகுடி பகுதிகளில் வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 32 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.;
ராதாபுரம்:
ராதாபுரம், பணகுடி பகுதிகளில் வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 32 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
தொடர் கொள்ளை
நெல்லை மாவட்டம் ராதாபுரம், பழவூர், கூடங்குளம், பணகுடி பகுதிகளில் வீடுகளில் புகுந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பு மற்றும் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இதுதொடர்பாக அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து கொள்ளையனை பிடிப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி, வள்ளியூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில், ராதாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சுற்றி வளைத்தனர்
கொள்ளை நடந்த வீடுகளில் பதிவான கொள்ளையனின் கைரேகைகளையும், பழைய குற்றவாளிகளின் கைரேகைகளையும் ஒப்பிட்டு பார்த்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கொள்ளை நடந்த வீடுகளில் பதிவான கைரேகைகளுடன், பழைய குற்றவாளியான கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பிள்ளையார்விளையை சேர்ந்த சுயம்புலிங்கம் (வயது 45) என்பவரது கைரேகை ஒத்துப்போனது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ராஜாக்கமங்கலம் சென்றனர். அங்கு வீட்டில் இருந்த சுயம்புலிங்கத்தை சுற்றி வளைத்து பிடித்தனர்.
32 பவுன் நகை மீட்பு
அவரிடம் நடத்திய விசாரணையில், ராதாபுரம், பணகுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வீடுகளில் புகுந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பு மற்றும் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுயம்புலிங்கத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 32 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.