60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார துறை அதிகாரிகூறினார்.

Update: 2021-08-22 19:44 GMT
சிவகாசி, 
சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார துறை அதிகாரிகூறினார். 
சிறப்பு முகாம் 
திருத்தங்கல் பாண்டியன்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 
இதில் 700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப் பட்டது. அதேபோல அனுப்பன்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆண்டியாபுரம், பள்ளப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் நடைபெற்ற முகாமில் 1000 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.  முகாமிற்கான ஏற்பாடுகளை தி.மு.க. நிர்வாகிகள் உதயசூரியன், ராஜேஷ், மைக்கேல், கேபிள்மாரியப்பன், குருசாமி ஆகியோர் செய்திருந்தனர். இந்த முகாமை ஆய்வு செய்ய வந்த சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 42 சுகாதார மாவட்டத்தில் சிவகாசி சுகாதார மாவட்டம் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் பட்டியலில் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. 
60 சதவீதம் 
சிவகாசி சுகாதார மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், வெம்பக்கோட்டை ஆகிய 6 வட்டாரங்கள் உள்ளது. இதில் தற்போது 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
விரைவில் மற்றவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிபோடப்படும். சிவகாசி நகராட்சி, திருத்தங்கல் நகராட்சி, சிவகாசி ஒன்றியத்தில் உள்ள 54 கிராமங்களில் வசிக்கும் மக்களில் கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 145 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிவகாசி வட்டாரத்தில் மட்டும் வாரத்திற்கு 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா நோய் கண்டறிய நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 1 லட்சத்து 200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 
நோய் பாதிப்பில் சிக்கி 65 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். சிவகாசி வட்டாரத்தில் உள்ள 10 கிராமங்களில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்