வியாபாரிகள் பெற்ற கடனை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்
வியாபாரிகள் பெற்ற கடனை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
வியாபாரிகள் பெற்ற கடனை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மேற்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கோமதி சங்கர் குருசாமி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு பேசினார்.
இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பாக கோரிக்கைகளை ஏற்று பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
குளிக்க தடை
குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாடகை கட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர். அதை தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி என அனைத்து பகுதிகளும் சீரான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்.
தி.மு.க.வின் 100 நாள் ஆட்சி பாராட்டும் வகையில் சிறப்பான ஆட்சியாக உள்ளது. வியாபாரிகள் பெற்றுள்ள கடனை செலுத்த டிசம்பர் மாதம் வரை காலஅவகாசம் வழங்க வேண்டும்.
விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விரைவில் ஆட்சி மன்ற குழு கூட்டி போராட்ட தேதி அறிவிக்கப்படும்.
சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பதை அரசு அமல் படுத்தக்கூடாது. ஆண்டுக்கு எவ்வளவு செலவு ஆகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் குருசாமி, நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.