மாவட்டத்தில் இன்று தியேட்டர்கள் திறப்பு
ஊரடங்கு தளர்வு எதிரொலியால் சேலம் மாவட்டத்தில் இன்று முதல் சினிமா தியேட்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கிருமி நாசினி தெளித்து, சுகாதார பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
சேலம், ஆக.23-
ஊரடங்கு தளர்வு எதிரொலியால் சேலம் மாவட்டத்தில் இன்று முதல் சினிமா தியேட்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கிருமி நாசினி தெளித்து, சுகாதார பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
தியேட்டர்கள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 50 சதவீத பார்வையாளர்களுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் சினிமா தியேட்டர்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் மற்றும் இதர பகுதிகளை நேற்று தியேட்டர் தொழிலாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் சுகாதார பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. புதுப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டால் தான் தியேட்டர்களுக்கு கூட்டம் வரும் என்பதால் அதை எதிர்பார்த்து, சில நாட்களுக்கு பிறகு தியேட்டர்களை திறக்கவும் சிலர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரசிகர்கள் மகிழ்ச்சி
பணியில் ஈடுபடும் தியேட்டர் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் தியேட்டர்களில் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களாக மூடி கிடந்த தியேட்டர்கள் மீண்டும் செயல்பட உள்ளதால் தியேட்டர் உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.