தியேட்டர்களில் தூய்மை பணி

4 மாதங்களுக்கு பிறகு திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தியேட்டர்களில் தூய்மை பணி நடைபெற்றது. கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.

Update: 2021-08-22 19:34 GMT
தஞ்சாவூர்:
4 மாதங்களுக்கு பிறகு திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தியேட்டர்களில் தூய்மை பணி நடைபெற்றது. கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.
தியேட்டர்கள்
கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டில் 7 மாதங்கள் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் வரை 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் செயல்பட்டு வந்தன.
அதன்பிறகு கொரோனா 2-வது அலை வேகமாக பரவியதால் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. இதன்காரணமாக மீண்டும் தியேட்டர்கள் எல்லாம் மூடப்பட்டன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தடுப்பூசிகள் போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டன.
திறக்க அனுமதி
இந்த நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டு வந்தன. வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்கப்பட்ட நிலையில் பஸ் போக்குவரத்தும் தொடங்கப்பட்டது.
ஆனால் சினிமா தியேட்டர்கள் திறப்பு குறித்து அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. தியேட்டர்களை உடனே திறக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டதுடன் இன்று (திங்கட்கிழமை) முதல் சினிமா தியேட்டர்களை திறக்கலாம் என தமிழகஅரசு அறிவித்துள்ளது.
தூய்மை பணி
50 சதவீத ரசிகர்களுடன் தியேட்டர்கள் இயங்கலாம் என்ற அறிவிப்பால் தியேட்டர் அதிபர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். 4 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்படுவதை முன்னிட்டு தியேட்டர்களை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது.
தஞ்சை மாநகரில் மட்டும் 8 தியேட்டர்கள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 24 தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தாலும் அவ்வப்போது தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளதால் இருக்கைகளை சுத்தம் செய்வது, தரையை சுத்தம் செய்வது போன்ற பணிகளை ஊழியர்கள் நேற்று முதல் மேற்கொண்டு வருகிறார்கள்.
கிருமிநாசினி தெளிப்பு
தஞ்சை பர்மாபஜார் பகுதியில் உள்ள விஜயா தியேட்டரில் 5-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த பணிகளை மேற்கொண்டனர். 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் ஒரு இருக்கை விட்டு மற்றொரு இருக்கையை கயிறு மூலம் கட்டி வைத்துள்ளனர்.
மேலும் தியேட்டர் மற்றும் அதன் சுற்றுவளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது. சில தியேட்டர்களில் ஒவ்வொரு இருக்கைக்கும் இடையில் உள்ள இருக்கையில் மக்கள் அமரக்கூடாது என்பதற்காக எக்ஸ் என்ற அடையாளம் ஒட்டப்பட்டுள்ளது. பல நாட்களாக புரஜெக்டர்கள் இயங்காமல் இருந்ததால் அதை செப்பனிடும் பணியும் நடைபெற்றன. நீண்டகாலத்திற்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுவது சினிமா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தியேட்டர் மேலாளர்கள் கூறும்போது, தியேட்டர் திறப்பை யொட்டி தியேட்டர்களை  சுத்தப்படுத்துவது, கிருமிநாசினி தெளிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கழிவறைகளும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. 4 மாதமாக திரைப்படங்கள் திரையிடப்படாததால் கருவிகள் முறையாக உள்ளதா? படங்கள் தெளிவாக உள்ளதா? எனவும் திரையிடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்கள்.

மேலும் செய்திகள்