கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

சிவகாசி அருகே கிரிக்கெட் விளையாடியபோது கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2021-08-22 19:28 GMT
தாயில்பட்டி, 
சிவகாசி அருகே கிரிக்கெட் விளையாடியபோது கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி  பரிதாபமாக உயிரிழந்தான். 
கிரிக்கெட் 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் பலசரக்கு கடை நடத்தி வருபவர் கண்ணன். இவரது மகன் ஹரி பிரசாத்(வயது 17). 
இவர் சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் இயங்காத நிலையில் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வந்தார். இந்தநிலையில் ஹரி பிரசாத் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றாா். 
பந்து விழுந்தது
அப்போது அந்த மைதானத்தில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக பந்து விழுந்தது. அந்த பந்தை எடுப்பதற்காக ஹரி பிரசாத் கிணற்றில் குதித்தார். 
நீண்டநேரமாக கிணற்றிலிருந்து அவர் வெளியே வராததால் அவருடைய நண்பர்களும் கிணற்றில் இறங்கி தேடினர். ஆனால்  ஹரி பிரசாத்தை கண்டுபிடிக்க முடியவில்ைல. 
பிணமாக மீட்பு
பின்னர் இதுகுறித்து அவரது தந்தை கண்ணனுக்கும், வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.  தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி மாணவனை தேடினர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு ஹரிபிரசாத் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். 
இதுகுறித்து தகவலறிந்து சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், வெம்பக்கோட்டை ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் ஹரிபிரசாத்தின் உடலை கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாட சென்ற மாணவன் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்