ராமேசுவரத்தில் கொட்டித்தீர்த்த மழை

ராமேசுவரத்தில் நேற்று ஒரு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ரதவீதிகள் குளம் போல மழைநீர் தேங்கி நின்றது.

Update: 2021-08-22 19:24 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் நேற்று ஒரு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ரதவீதிகள் குளம் போல மழைநீர் தேங்கி நின்றது.

பலத்த மழை

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை முதலே இருள் சூழ்ந்தது போல் வானில் கருமேக கூட்டம் காட்சியளித்தது. திடீரென காலை 8 மணிக்கு லேசாக மழை பெய்ய தொடங்கியது.சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை பெய்தது.
 பலத்த மழையால் கோவிலின் ரதவீதி சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. ரதவீதி சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் தான் பக்தர்கள் அனைவரும் கஷ்டப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு நடந்து சென்றனர்.

அம்மன் சன்னதி

அதுபோல் கோவிலில் அம்மன் சன்னதி முன்மண்டபத்தில் மழைநீர் தேங்கி நின்றது. தேங்கி நின்ற மழை நீரை கோவில் பணியாளர்கள் வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதுபோல் ரதவீதி சாலையில் தேங்கி நின்ற மழைநீர் வாருகால் வழியாக வெளியேற்றப்பட்டது.
ராமேசுவரம் நகரில் ஒரு சில இடங்களில் தான் நேற்று பலத்த மழை பெய்தது. பெரும்பாலான பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.  இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் நேற்று காலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. அதுபோல் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் நேற்று காலை முதல் மாலையிலும் கருமேகக் கூட்டம் காரணமாக இருள் சூழ்ந்து காணப்பட்டது. கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்