அரசு பஸ் கண்டக்டர் கொலையில் உறவினர் கைது

முன்விரோதத்தால் அரசு பஸ் கண்டக்டர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-22 19:09 GMT
திருப்புவனம்,"

முன்விரோதத்தால் அரசு பஸ் கண்டக்டர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

அரசு பஸ் கண்டக்டர்

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா பூஞ்சுத்தி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லச்சாமி(வயது 45). அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் இரவு மேலூரில் இருந்து திருப்புவனத்துக்கு அரசு பஸ்சில் வந்தார். திருப்புவனத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு மேலரத வீதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இட்லி வாங்க சென்றார்.
அங்கு வந்த அவரது ஊரை சேர்ந்த உறவினர் பூங்குடிச்சாமி என்பவர், செல்லச்சாமியை வழிமறித்து தகராறு செய்து உள்ளார். பின்னர் ஆத்திரம் அடைந்த அவர் உருட்டு கட்டையால் தாக்கினார். இதை தடுக்க முயன்ற செல்லசாமியின் உறவினர் அன்புசெல்வன், அரசனூரை சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரையும் பூங்குடிச்சாமி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

வாக்குமூலம்

பின்னர் உருட்டு கட்டையால் தாக்கப்பட்ட செல்லச்சாமியை அவர்கள் மீட்டு ஆட்டோவில் திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பரிசோதித்த போது, ஏற்கனவே அவர் இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து செல்லச்சாமியின் மனைவி தேன்ெமாழி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த பூங்குடிச்சாமியை கைது செய்தனர். கைதான அவர் முன்விரோதத்தால் அரசு பஸ் கண்டக்டரை கொலை செய்து விட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் ெதரிவித்தனர்.
இந்த வழக்கில் உறவினர்கள் விஜயா, ராஜேந்திரபிரபு ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

சொத்து தகராறு

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மீனாட்சிபுரத்தில் 1½ ஏக்கர் புஞ்சை நிலத்தை செல்லச்சாமி வாங்கி உள்ளார். அந்த நிலத்தை பூங்குடிச்சாமி, விஜயா ஆகியோர் அனுபவ பாத்தியமாக அனுபவித்து வந்து உள்ளனர். அந்த நிலத்தை செல்லச்சாமி வாங்கியதால் தகராறு ஏற்பட்டு வந்தது. அதோடு கடந்த உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு செல்லச்சாமியின் சித்தி அன்னபூரணமும், பூங்குடிச்சாமியின் மனைவி அழகு என்பவரும் போட்டியிட்டு உள்ளனர். இதில் அன்னபூரணம் வெற்றி பெற்றுள்ளார். இதனால் பூங்குடிச்சாமி, அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரபிரபு ஆகியோர் சேர்ந்து கண்டக்டர் செல்லச்சாமியிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு செல்லச்சாமி பூஞ்சுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வரும் போது அங்கு வந்த பூங்குடிச்சாமி, கண்டக்டர் செல்லச்சாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது மேலூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்