வேலூர் மண்டலத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு இன்று முதல் 50 அரசு பஸ்கள் இயக்கம்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு 50 அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-08-22 18:51 GMT
வேலூர்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு 50 அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பு  நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே மாதம் 10-ந் தேதி தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் பிற மாநிலங்களுக்கு அரசு, தனியார் பஸ் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 48 நாட்களுக்கு பின்னர் ஜூன் 28-ந் தேதி தொற்று பரவல் குறைவாக காணப்பட்ட 23 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

அதன்பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந் தேதி முதல் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களுக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்படவில்லை.

50 அரசு பஸ்கள் இயக்கம்

அதனால் வேலூர் மண்டலத்தில் இருந்து பெங்களூரு, கோலார் தங்கவயல் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி, குப்பம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்கு பஸ்கள் செல்லவில்லை.
எனினும் வேலூரில் இருந்து தமிழக-ஆந்திர மாநில எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை வரை பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோன்று ஆந்திர மாநில பஸ்களும் அந்த மாநில எல்லை வரையில் இயக்கப்பட்டு வந்தன. 

தற்போது தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதன்படி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, கோலார் தங்கவயல் ஆகிய ஊர்களுக்கு 23 பஸ்கள், ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூர், குப்பம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்கு 27 பஸ்கள் என்று மொத்தம் 50 பஸ்கள் இன்று அதிகாலை முதல் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.
வெளிமாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்குவதற்காக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்