கார் மீது பஸ் மோதல்; தாசில்தார் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் தாசில்தார் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் பாண்டியன். இவர் நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு தனது காரில் புறப்பட்டார். அவரே காரை ஓட்டினார்.
உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக தாசில்தார் பாண்டியனின் கார் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் இருந்த தடுப்புக்கட்டை மீது மோதி நின்றது. இந்த விபத்தில் தாசில்தார் பாண்டியன் படுகாயமடைந்தார்.
தீவிர சிகிச்சை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.