மாமல்லபுரத்தில் காலாவதியான உணவு பொருட்களை விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்
மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காலாவதியான உணவு பொருட்களை கைப்பற்றி அபராதம் விதித்தனர்.
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்கள், உணவகங்கள், டீ கடைகள், மளிகை கடைகள், போன்றவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்கள், மாமல்லபுரம் ஒத்தவாடை தெரு, பஸ் நிலையம், பூஞ்சேரி போன்ற பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு சென்று அங்கு சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகிறதா? என்று உணவு சமையல் கூடங்களின் உள்ளே சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது சமையல் கூடங்களில் உள்ள குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டு உள்ள மீன், இறால், கோழிக்கறி போன்ற இறைச்சிகள் காலாவதியானதா? என பரிசோதித்தனர்.
பின்னர் ஒத்தவாடை தெருவில் டீ கடையில் சோதனை செய்த உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா அங்கு டீத்தூளை தண்ணீரில் கலந்து ஆய்வு செய்தபோது அவை போலியானது என்பதை கண்டறிந்தனர். உடனே அந்த டீ கடைக்கு அபராதம் விதிதத்தனர். அதேபோல் மற்றொரு கடையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் காலாவதியான பிரட், கேக், பிஸ்கெட் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
பிறகு பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து காலாவதியான பொருட்களையும் ஒரு மைதானத்தில் கொட்டி அழித்தனர். அப்போது அவர்களுடன் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன், மாமல்லபுரம் சுகாதார ஆய்வாளர் ரகுபதி, சுகாதார மேற்பார்வையாளர் தாமோதரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.