சாமி தரிசனம் செய்ய அனுமதி

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்கிழமை மற்றும் வார விடுமுறை நாட்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;

Update: 2021-08-22 14:04 GMT
தளி
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்கிழமை மற்றும் வார விடுமுறை நாட்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அமணலிங்கேஸ்வரர் கோவில்
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட இயற்கை எழில் நிறைந்த ரம்மியமான சூழலில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கே பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒருசேர ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், சப்தகன்னிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். கோவிலில் மகாசிவராத்திரி, அமாவாசை, பிரதோஷம், கிருத்திகை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. அடிவாரத்திலிருந்து 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காகவும் அங்குள்ள இயற்கை சூழலை ரசிக்கவும், புகைப்படம் எடுத்து மகிழவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.
அனுமதி மறுப்பு
கொரோனோ 2வது அலை கட்டுக்குள் இருந்தாலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதுடன் பிரசித்தி பெற்ற கோவில்களில் அமாவாசை, வார விடுமுறை நாட்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
 இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று பவுர்ணமி மற்றும் ஆவணி அவிட்டத்தையொட்டி மும்மூர்த்திகளை தரிசனம் செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தந்தனர். ஆனால் கோவிலுக்கு முன்பாகவே தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் அதை தாண்டி முன்னேறிச்செல்ல இயலவில்லை. 
வெறிச்சோடி காணப்பட்டது
அத்துடன் அங்கு கோவில் பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பக்தர்கள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து தடுப்புகளுக்கு முன்பு தேங்காய் உடைத்து வாழைப்பழம், சூடம், பத்தி வைத்து வழிபாடு செய்துவிட்டு திரும்பிச்சென்றனர். 
மேலும் கோவிலில் வெள்ளிக்கிழமை மற்றும் வார விடுமுறை நாட்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்குமாறும் கோரிக்கை விடுத்து உள்ளனர். பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. அதைத்தொடர்ந்து அணைப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

மேலும் செய்திகள்