ஆன்லைன் மூலம் விற்பனை ரூ.22 கோடி திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்; 4 பேர் கைது

திமிங்கல உமிழ்நீரை கடத்தி ஆன்லைன் மூலம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.22 கோடி திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2021-08-22 11:01 GMT
பூந்தமல்லி, 

தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திமிங்கலத்தின் உமிழ்நீரை சேகரித்து அங்கிருந்து கடத்தி வந்து சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் சில மர்ம நபர்கள் விற்பதாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வனத்துறைக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் ஸ்ரீபெரும்புதூர் வனசரக அதிகாரி ராஜ்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மர்ம நபர்களை பிடிக்க ஆன்லைனில் திமிங்கலத்தின் உமிழ் நீரை வாங்க விண்ணப்பித்தனர்.

அந்த மர்ம நபர்கள் சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் வந்து வாங்கிச் செல்லும்படி தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் மாங்காடு சென்று திமிங்கலத்தின் உமிழ்நீர் வாங்குவது போல் சென்று சுற்றி வளைத்து கையும் களவுமாக அந்த கும்பலை பிடித்தனர். இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சென்னையை சேர்ந்த விஜயபாஸ்கர் (வயது 56), கிருஷ்ணமூர்த்தி (33), ரஞ்ஜித் (36), மதுரையை சேர்ந்த முருகன் (53) ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் இருந்து 22 கிலோ எடை கொண்ட ரூ.22 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் உமிழ்நிரை கைப்பற்றினர். திமிங்கல உமிழ்நீர் நறுமண பொருட்கள் தயாரிப்பதற்கு மூலபொருளாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்