திருமண தடையை போக்க தோஷம் கழிப்பதாக கூறி நகை-பணம் பறிப்பு - வாலிபர், போலி சாமியாருக்கு போலீஸ் வலைவீச்சு

திருமண தோஷம் கழிப்பதாக கூறி முதியவர்களை ஏமாற்றி நூதன முறையில் நகை, பணத்தை பறித்துச்சென்ற வாலிபர் மற்றும் போலி சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-08-22 10:58 GMT
தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பார்வதி நகர், இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 72). இவருடைய மனைவி அவையம்பாள்(65). இவர்களுக்கு 32 வயதில் ஒரு மகனும், 24 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் இதுவரையிலும் திருமணம் ஆகவில்லை. இதனால் ராமச்சந்திரன்-அவையம்பாள் தம்பதி மனவேதனையில் இருந்தனர்.

கடந்த 5-ந்தேதி ஜோதிடம் பார்ப்பதாக கூறி 25 வயதுடைய வாலிபர் ஒருவர், ராமச்சந்திரன் வீட்டுக்கு வந்தார். அவர், “உங்களுக்கு தோஷம் உள்ளது. அதற்கு பரிகாரம் செய்தால் உங்கள் மகன், மகள் இருவரின் திருமண தடை நீங்கிவிடும்” என்றார்.

இதை நம்பி ராமச்சந்திரனும், அவருடைய மனைவியும் அந்த வாலிபரை வீட்டுக்குள் அழைத்து சென்றனர். அங்கு அந்த வாலிபர், சுமார் ஒரு மணி நேரம் பூஜைகள் செய்தார். பின்னர் அதற்காக ரூ.24 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். ராமச்சந்திரனின் செல்போன் எண்ணையும் வாங்கி சென்றார். மறுநாள் ராமச்சந்திரனுக்கு போன் செய்த அந்த வாலிபர், “உங்களது தோஷம் முழுமையாக கழியவில்லை.

அதற்கு நீங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி புளிக்குள் வைத்து, அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்யுங்கள். சில நாட்களில் திருவண்ணாமலையில் இருந்து சாமியார் ஒருவர் வந்து, உங்கள் தோஷத்தை கழிப்பார்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

அதை உண்மை என நம்பிய இருவரும் தாங்கள் அணிந்து இருந்த சுமார் 8 பவுன் நகையை கழற்றி, புளியில் வைத்து, அதை பூஜை அறையில் வைத்து தினமும் பூஜைகள் செய்து வந்தனர்.

அதன்பிறகு சில நாட்கள் கழித்து ஜோசியர் கூறியதாக கூறி ராமச்சந்திரன் வீட்டுக்கு சாமியார் ஒருவர் வந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்ற அவர், பூஜை அறைக்குள் புளிக்குள் வைத்திருந்த நகைகளை எடுத்து, ஒரு செம்பில் போட்டு பூஜை செய்தார்.

பின்னர் அந்த செம்பின் மேல் பகுதியை மஞ்சள் துணியால் மூடிவிட்டு, 3 நாட்கள் கழித்து அதில் உள்ள நகையை எடுக்குமாறு கூறிவிட்டு சென்றார். அதன்படி 3 நாட்கள் கழித்து செம்பை பார்த்தபோது, அதில் வைத்திந்த நகைகள் மாயமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னரே தங்களை மர்மநபர்கள் இருவரும் நூதன முறையில் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை பறித்து சென்றதை தெரிந்துகொண்டனர்.

இது குறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் மற்றும் போலி சாமியாரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்