சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகப்பட்சமாக ஏற்காட்டில் 98 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.;
சேலம், ஆக.22-
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகப்பட்சமாக ஏற்காட்டில் 98 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
விடிய, விடிய மழை
வளிமண்டலத்தில் நிலவு மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் சேலம் உள்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தது.
இரவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் இரவு 9.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. மேலும் மழையின் போது சூறைக்காற்றும் வீசியது. இதனால் நாகலூர், செம்மநத்தம் உள்ளிட்ட மலை கிராமங்களில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது.
கடும் மேகமூட்டம்
மழையின் காரணமாக ஏற்காட்டில் காலையில் கடும் மேகமூட்டம் காணப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். மேலும் மழை தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் பலர் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதேபோல் சேலத்தில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. இதனால் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், 4 ரோடு, சங்கர் நகர், சத்திரம், அஸ்தம்பட்டி, அழகாபுரம், அம்மாபேட்டை, கிச்சிப்பாளம் என மாநகரில் பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக கிடந்தது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.
98 மி.மீ. மழை
அதிகாலை வேளையில் மழை பெய்ததால் காய்கறிகளை கொண்டு வருவது பாதிக்கப்பட்டது. மேலும் உழவர் சந்தைகள், மார்க்கெட்டுகளில் பொதுமக்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. சேலத்தில் காலை 11 மணி வரை தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் காலையில் இருசக்கர வாகனங்களில் அலுவலக வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
சிலர் குடைகளை பிடித்துக்கொண்டு நடந்து சென்றதை பார்க்க முடிந்தது. இதே போல மாவட்டத்தில் சங்ககிரி, ஓமலூர் உள்பட பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஏற்காட்டில் அதிகபட்சமாக 98 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
மற்ற இடங்களில் பதிவான மழை அளவு மி.மீ. வருமாறு:-
சங்ககிரி-37, சேலம்-25.5, ஓமலூர்-4, காடையம்பாடி-2, எடப்பாடி-1.6.