முன்னேற்பாடு் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி சேலத்தில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் கார்மேகம் ஆலோசனை நடத்தினார்.
சேலம், ஆக.22-
வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி சேலத்தில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் கார்மேகம் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகள், குடிநீர் தொட்டிகள், கழிவறைகள் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டு போதிய அளவு கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
கிருமி நாசினி
தினமும் பள்ளி தொடங்குவதற்கு முன்பும், பள்ளி முடிந்த பின்பும் இரு வேளைகளிலும் கிருமி நாசினி தெளிக்க தக்க ஏற்பாடுகளை தொடர்புடைய அலுவலர்கள் செய்ய வேண்டும். பள்ளி திறப்பிற்கு பின்னர் அனைத்து பள்ளிகளிலும் மருத்துவ குழுக்கள் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், கொரோனா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பரங்களை அனைத்து பள்ளிகளிலும் வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் ஏற்படுத்திட உரிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து பள்ளிக்கு வர ஏதுவாக தேவையான அனைத்து வழித்தடங்களிலும் அரசுப் பேருந்துகள் வசதிகள் போதுமான அளவில் இயக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு தேவையான வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகளை வழங்கிட வேண்டும்.
கட்டிட மராமத்து பணிகள்
விடுதிகளிலுள்ள மாணவர்கள் தங்கும் அறை, சமையலறை, குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகள் மற்றும் விடுதி வளாகம் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படுவதையும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி அத்தியாவசியமாக தேவையுள்ள கட்டிட மராமத்து பணிகளையும், மின் மராமத்து பணிகளையும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனே மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து தனியார் பள்ளிகளின் போக்குவரத்து வாகனங்கள் தணிக்கை செய்து நல்ல முறையில் உள்ளதையும், தனியார் பள்ளி வாகனங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவதையும், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குனர் (வளர்ச்சி) ஷேக் அப்துல் ரஹமான், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.